இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக வருமானம் இழந்த குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் இந்த வாரம் முதல் 2000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
அரசாங்கத்தினால் வழங்கப்படும் எந்தவொரு கொடுப்பனவும் கிடைக்கப்பெறாத குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கே இந்த கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி சகல மாவட்ட செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி அரச ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர், சமூர்த்தி பயனாளிகள் மற்றும் வயோதிப கொடுப்பனவு பெறுவோர் உள்ளிட்ட அரசாங்கத்திடமிருந்து மாதாந்த கொடுப்பனவுகளை பெறுவோருக்கு ஊரங்கு காலத்தில் வழங்கப்படும் இந்த 2000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படாது என்று பொருளாதார மீளெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிராமிய குழுக்களின் உதவியுடன் கிராம சேவகர்களின் ஊடாக இதற்கு தகுதியுடையவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.