
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சிறைச்சாலை வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீன், தற்போது கொழும்பு மகசின் சிறைச்சாலையின் விளக்க மறியலின் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அங்கு பணியில் இருந்த சிறைச்சாலை வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ரிஷாட் பதியுதீன் நடந்துகொண்டுள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தலுக்கு இலக்கானதாக கூறப்படும் குறித்த வைத்தியரினால் சிறைச்சாலைகள் ஆணையாளரிடமும், பொரளை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த சம்பவத்தின் போது, ரிஷாட் பதியுதீன் உயிர் அச்சுறுத்தலை விடுக்கும் வகையிலான கடுமையான சொற் பிரயோகங்களை பயன்படுத்தியிருந்ததாக அந்த வைத்தியர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின்படி, உதவி பொலிஸ் பரிசோதகரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.