November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.போதனா மருத்துவமனையின் பதில் பணிப்பாளரை தொலைபேசியில் மிரட்டிய நபர் கைது

யாழ்.போதனா மருத்துவமனையின் பதில் பணிப்பாளர்,மருத்துவர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜாவை தொலைபேசியில் மிரட்டிய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஜனாதிபதி செயலக அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திய அந்த நபர்,யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சிற்றுண்டிச் சாலையை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை தாம் முன்மொழிபவருக்கே வழங்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

இந்த தொலைபேசி அழைப்பு கடந்த 16 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மருத்துவமனை பதில் பணிப்பாளருக்கு வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மருத்துவர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை வழங்கியிருந்தார்.

அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய, முதன்மை பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ,தொலைபேசி அழைப்பு எடுத்தவர் நீர்கொழும்பில் வசிப்பவர் என கண்டறிந்தார்.

அவரை கைது செய்வதற்கான விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த யாழ்ப்பாணம் பொலிஸார், பிடியாணை உத்தரவை ஒன்றையும் பெற்றனர்.

சந்தேக நபரின் இடத்துக்குச் சென்ற யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய, முதன்மை பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ தலைமையிலான பொலிஸ் குழு சந்தேக நபரைக் கைது செய்து யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.தற்போது நாட்டில் நிலவும் கொவிட்-19 பரவல் காரணமாக சந்தேக நபரை நிபந்தனையுடனான பிணையில் விடுவித்து வழக்கை ஒத்திவைத்தது.

இதேவேளை,யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சிற்றுண்டிச் சாலையை நடத்துவதற்காக கிடைக்கப் பெற்ற மூன்று விண்ணப்பங்களும் நிர்வாகத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையிலேயே பதில் பணிப்பாளர், மருத்துவர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜாவுக்கு தொலைபேசி வழியாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.