July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊரடங்கு காலத்தை குறையுங்கள்; ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்

இரண்டு வார காலத்திற்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாத இறுதி வரையில் ஊரடங்கை நீடிக்காது ஒரு வாரகாலத்துடன் தளர்த்த நடவடிக்கை எடுக்க முடியுமென்றால் அது குறித்து ஆராயுமாறு ஆளுந்தரப்பு அமைச்சர்கள் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளனர்.

பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் தேரர்களின் அழுத்தம் காரணமாக எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் நாட்டை முடக்குவதாக ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், அமைச்சர்கள் சிலர் இது குறித்து ஜனாதிபதியிடம் கலந்துரையாடியுள்ளனர். குறிப்பாக நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள், கடன் நெருக்கடி நிலைமைகள் குறித்தும் எடுத்துக் கூறியுள்ளனர்.

நாட்டின் சுகாதார நிலைமைகள் மற்றும் கொவிட் அச்சுறுத்தல் நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தும் அதேவேளையில், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி நாட்டின் அத்தியாவசிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும்,அத்தியாவசிய சேவைகளை முடக்கி மக்களுக்கு நிவாரணங்களைவழங்குவது கடினமான ஒன்றாக உள்ளதாகவும்,அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல் கடன் நெருக்கடி நிலைமைகள் குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும்,இந்த ஆண்டு இறுதி மற்றும் அடுத்த ஆண்டு முதல் காலாண்டுக்கான கடன் செலுத்த வேண்டிய நிலைமைகளை சரியாக கையாள வேண்டியுள்ளது.இவ்வாறான நிலையில் நாட்டை நீண்ட காலம் முடக்குவது அரசாங்கத்திற்கு கூடிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதை நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இறுதியாக கூடிய வாழ்க்கை செலவு பற்றிய அமைச்சரவை உப குழுவிழும் பங்கு பற்றிய அமைச்சர்கள் பொருளாதார நிலைமைகள் குறித்தும், மக்களுக்கான நிவாரணம் வழங்குவது குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளனர். முடியுமானால் கடுமையான சுகாதார வழிமுறைகளை கையாண்டு சட்டங்களையேனும் பிறப்பித்து மக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார வழிமுறைகளுடன் நாட்டை விரைவில் திறக்கும் பொறிமுறை ஒன்றினை கையாள்வது குறித்து ஆராயுமாறும் அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.