
இலங்கையில் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் கர்ப்பிணி தாய்மாருக்கு தடுப்பூசி ஏற்றும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
தற்போதைய கொவிட் வைரஸ் பரவல் நிலைமைகள் மற்றும் அடுத்த கட்ட சுகாதார வேலைத்திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
கொவிட் 19 வைரஸ் பரவல் மிக மோசமான தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில், சிறுவர் மற்றும் வயோதிபர் மிக கவனமாக இருக்க வேண்டும்.அதேபோல் கர்ப்பிணி தாய்மார் கூடிய கவனம் எடுக்க வேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
“தற்போது வரையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுப்பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் 27 கர்ப்பிணி தாய்மார் மரணித்துள்ளனர் என பதிவாகியுள்ளது.இந்தஎண்ணிக்கை அதிகரிக்க இடமளிக்கக்கூடாது” என்றார்.
இதற்கமைய நடமாடும் தடுப்பூசி மையம், அல்லது ஒவ்வொரு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி மையங்களில் கர்ப்பிணி தாய்மார்கள் தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், நாட்டில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களில் 70 வீதமான மரணங்கள் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள். அதேபோல் 60வயதிற்கு மேற்பட்ட மரணங்களில் 90 வீதமானவர்கள் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறினார்.
அதேபோல், 23 ஆம் திகதி தொடக்கம் ஒரு வாரகாலம் 60 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி ஏற்றும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த காலத்தில் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத 60 வயதிற்கு மேற்பட்ட சகலரும் அக்கறையுடன் தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.