இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 100 டொன் மருத்துவ திரவ ஒட்சிசனை ஏற்றிய இந்திய கடற்படையைச் சேர்ந்த ‘சக்தி’ எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று பிற்பகல் வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பலை வரவேற்க, துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே. ஜெகொப் ஆகியோர் கொழும்பு துறைமுகம் சென்றிருந்தனர்.
இலங்கையினால் இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட குறித்த ஒட்சிஜன் தொகையை ஏற்றிய குறித்த கப்பல், கடந்த வியாழக்கிழமை இந்தியாவின் விசாகபட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையை நோக்கி புறப்பட்டு இன்று பிற்பகல் இலங்கையை வந்தடைந்துள்ளது.
இதேவேளை, மேலும் 39 டொன் ஒட்சிஜனை கொண்டு வருவதாற்காக இந்தியா சென்ற ‘சக்தி’ எனும் அதே பெயரைக் கொண்ட இலங்கை கடற்படைக்குச் சொந்தமான கப்பல் நாளை காலை கொழும்பை வந்தடையவுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கப்பல் கடந்த கடந்த ஓகஸ்ட் 17ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திலிருந்து புறப்பட்டு ஆகஸ்ட் 18 ஆம் திகதி சென்னை துறைமுகத்தை சென்றடைந்தது.
நாட்டில் கொவிட்-19 டெல்டா திரிபு தொற்றைக் கொண்ட தொற்றாளர்களின் நாளுக்கு நாள் அதிகரிப்பைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளர்களுக்கு அவசியமான ஒட்சிஜன் தேவையை ஈடுசெய்ய குறித்த ஒட்சிஜன் தொகை நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.