
இலங்கை முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தக் காலப்பகுதியில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோர் அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை துஷ்பிரயோகம் செய்வது சட்ட விரோத செயலாகும் என்று இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் ஆடைத் தொழில்கள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் மருந்தகங்களின் செயற்பாடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிலுக்குச் செல்பவர்கள் விஷேட அனுமதி பெறத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும் வீதிச் சோதனைகளில் ஈடுபடும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரிடம் உங்களது தொழில் ரீதியிலான அடையாள அட்டையை அல்லது அத்தியாவசிய சேவையுடன் தொடர்புடைய ஆவணத்தை காட்டி அதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் எவ்வித அனுமதிப்பத்திரங்களும் பொலிஸாரினால் வழங்கப்படாது என்றும், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் மாகாண மற்றும் மாவட்ட செயலாளர்களின் ஊடாகவே அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.