July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படாது”: அமைச்சர் பந்துல

நாடு முடக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அரச ஊழியர்களின் சம்பளங்கள் குறைக்கப்படாது என வர்த்தக விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடு முடக்கப்படுமானால் அரச ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை வருமானம் இழந்தவர்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், அவ்வாறானதொரு தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளதா என அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பப்பட்டது.

இதன்போது பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன, அவ்வாறான எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும், ஆனால் நெருக்கடியான சூழல்களின்போது தியாகங்களை செய்ய நேரிடும் என்றும் கூறியுள்ளார்.

உதாரணமாக தாய்லாந்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டபோது அந்நாட்டிலுள்ள ஆன்மீகத் தலைவர்கள், விகாரைகளில் இருந்த தங்கங்களை மத்திய வங்கியிடம் ஒப்படைத்து தியாகம் செய்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல வடக்கு, கிழக்கு போரின்போது நாடுகளும், தனி நபர்களும் நன்கொடைகளை வழங்கினர். நமக்காக நாம் நிதியத்துக்கு நானும் எனது பாராளுமன்ற உறுப்பினருக்கான சம்பளத் தொகையை வழங்கியுள்ளேன். அத்துடன் மேலும் சில அரசியல் பிரமுகர்களும் தம்மால் முடிந்த பங்களிப்பை செய்துவருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.