உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமை (21) கருப்பு கொடியை ஏற்றுமாறு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை விடுத்த வேண்டுகோள் மட்டக்களப்பு மக்களினால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருந்ததுடன், படுகாயங்களும் அடைந்திருந்தனர்.
இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என கத்தோலிக்க திருச்சபை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.
அதனடிப்படையில், தாக்குதலுக்கு காரணமானவர்களை இதுவரையில் இனங்காண அரசாங்கம் தவறிய காரணத்தினால், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நாடு முழுவதும் சனிக்கிழமை (21) கருப்பு கொடி ஏற்றுமாறு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்திருந்தார்.
எனினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எந்த தேவாலயத்திலும் கறுப்புக் கொடிகள் ஏற்றப்படவில்லை.குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குள்ளான சியோன் தேவாலயத்தில் கூட கறுப்புக் கொடியை காணமுடியவில்லை.