ஈஸ்டர் தாக்குதலுக்கான நீதி தொடர்பில் தமிழ்,முஸ்லிம்,சிங்களவர்கள் என அனைத்து மதத்தினரும் ஒன்றாக இணைந்து குரல் கொடுத்து உண்மையினை கண்டறிய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 28 மாதங்களை கடந்துள்ள நிலையில் நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ள மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு வட,கிழக்கில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து குரல் எழுப்பவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதிவேண்டி கறுப்புக் கொடிகளை கட்டுமாறு பேராயர் மல்கம் ஆண்டகை விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக சனிக்கிழமை (21) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தனது அலுவலகத்திற்கு முன்பாக கறுப்புக் கொடியை ஏற்றிவைத்தார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருதது தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 28 மாதங்கள் பூர்த்தியடைகின்றது.
கடந்த காலத்தில் பேராயர் மல்கம் ஆண்டகை உட்பட தெற்கில் உள்ள கத்தோலிக்க மதகுருக்கள் வடகிழக்கில் நடந்த அநீதிகளுக்கு குரல் கொடுக்கவில்லை,நீங்கள் ஏன் அவர்களுக்காக குரல் கொடுக்கின்றீர்கள் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படும்.
இருந்த போதிலும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடைபெற்ற போது அதில் பெருமளவு பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களாகும். மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 31 பேர் உயிரிழந்திருந்ததுடன் அதில் 15 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் உயிரிழந்திருந்தனர்.அந்த தாக்குதலில் இரண்டு கண்களையும் இழந்த சிறுமியொருவர் தனது தாய் தந்தையரையும் இழந்த நிலையில் இன்று உள்ளார்.இவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்பதற்கான விடையை கேட்க வேண்டிய தேவையுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருக்கட்டும் இலங்கை தமிழரசுக்கட்சியாக இருக்கட்டும் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.யாரும் செய்யவில்லையென்பதை பற்றி கதைப்பது அநாவசியமாகும்.நாங்கள் நீதி கேட்க வேண்டிய நிலையுள்ளதனால் அதனை கேட்க வேண்டும்.அதன் காரணமாக நான் இதற்கு ஆதரவு வழங்கியுள்ளேன்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் 250க்கு மேற்பட்டவர்கள்தான் உயிரிழந்திருந்தனர்.ஆனால் இந்த நாட்டில் 7000க்கும் அதிகமானவர்களை இன்றைய கொரனா தொற்றினால் இழந்திருக்கின்றோம். நாட்டின் ஜனாதிபதி அவர்கள் நாட்டின் கடன்களை கட்ட வேண்டும்,வேலைவாய்ப்பினை பாதுகாக்க வேண்டும்,வியாபாரங்களை பாதுகாக்க வேண்டும் என்று கூறுகின்றாரே தவிர நாட்டின் மக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறியது மிகவும் குறைவு.
பேராயர் மல்கம் ஆண்டகை இந்த விடயத்தினை தனது கையிலெடுத்து தொடர்ந்து ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு நீதி கோரிவருவதன் காரணத்தினால் இதற்கு ஒரு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிருந்தது.2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை.இறுதி யுத்ததிற்கு முற்பட்ட காலத்தில் மதத்தலைவர்கள் கடத்தப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள் தேவாலயங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு அங்கு தஞ்சடைந்திருந்த பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களுக்கான நீதியும் கிடைக்கவில்லை.இவ்வாறான நிலையில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் ஒன்றுக்கு இந்த நாட்டிற்குள் உடனடியாக தீர்வு கிடைப்பது என்பது கஸ்டம்தான்.
இருந்தபோதிலும் பேராயர் மல்கம் ஆண்டகை அதன்மீது நம்பிக்கை கொண்டு அது தொடர்பான அறிக்கைகளை விடுத்திருந்தார்.அதில் தாக்குதல் தாரிகளுடன் தொடர்புபட்டவர்களின் பெயர்களை வெளிப்படுத்தியிருந்தார்.
கடந்த காலத்தில் இஸ்லாமிய கடும்போக்கு சக்திகள் ஒரு சிலதை பயன்படுத்தி யாரோ ஒருவர் தமிழர்,சிங்களவர் மீது ஒரு தாக்குதலை நடாத்தினார் என்று சொன்னால் நாளை பௌத்த மதத்தினை சேர்ந்த ஒருவரையோ,சைவ சமயத்தினை சேர்ந்த ஒருவரையோ வைத்து ஓரு தாக்குதலை அவர் நடத்தமாட்டார் என்பதற்கு என்ன உறுதி இருக்கின்றது. இவற்றுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைப்பதாகயிருந்தால் நடந்தது என்ன என்பதை வெளிப்படுத்தவேண்டும்.அதற்கு நாங்கள் நிச்சயமாக குரல்கொடுப்போம் என்று அவர் மேலும் தெரிவித்தார்,