இலங்கையில் அடுத்து வரும் இரண்டு வாரங்களின் பின்னர் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடையும் சாத்தியம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று நாட்டில் அதி கூடிய தினசரி கொவிட் உயிரிழப்பாக 195 இறப்புகள் பதிவாகியிருந்தது. அத்தோடு, நேற்று (20) 3839 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாகவும் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, அடுத்த இரண்டு வாரங்களுக்கு நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்வடைந்து செல்வதை அவதானிக்க முடியும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
எனினும் நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக இரண்டு வாரங்களின் பின்னர் நாட்டின் கொவிட் தொற்று பரவல் குறைவடையும் என அவர் எதிர்வு கூறியுள்ளார்.
மக்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியிலும் அதன் பின்னரும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் உபுல் ரோஹண கேட்டுக் கொண்டுள்ளார்.
அவ்வாறு இல்லாவிட்டால் நாடு தற்போது முகம் கொடுத்துள்ள இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீண்டு வருவது மிகவும் சிரமமானதாக இருக்கும் என்றார்.