திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு நேரத்தில் கடைகளில் வியாபாரம் மேற்கொண்ட ஆறு பேர் கந்தளாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தளாய், பேராறு, வட்டுக்கச்சி மற்றும் அக்போபுர போன்ற பகுதிகளில் கடைகளைத் திறந்து, வியாபாரம் மேற்கொண்டு வந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் ஹோட்டல்கள், கோழி இறைச்சிக் கடைகள், பேக்கரி, சில்லறைக் கடைகளை திறந்து, வியாபாரம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேவையான பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்க அனுமதிக்கப்பட்டிருந்தாலும், கடைகளைத் திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தனிமைப்படுத்தல் ஊரடங்கில் தடை செய்யப்பட்டுள்ளது.
வியாபாரம் மேற்கொண்ட சந்தேக நபர்களை கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம், தடைகளை மீறி போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டோரை பொலிஸாரும் இராணுவத்தினரும் சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.