January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல் ஊரடங்கில் இயங்கும் சேவைகள் தொடர்பாக சுகாதார அமைச்சின் அறிவிப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் நடைபெற அனுமதிக்கப்பட்டுள்ள சேவைகள் தொடர்பாக சுகாதார அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அனைத்து சுகாதாரத்துறை சார்ந்த சேவைகளையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

பொலிஸ் நிலையங்கள், கிராம சேவகர் அலுவலகங்கள், பிரதேச சபை அதிகாரசபைகள், பொதுப் பயன்பாட்டு சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க அனுமதிக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சுப்பர் மார்கட் மற்றும் வியாபார நிலையங்கள் மற்றும் பேக்கரிகள் பொருட்களை விநியோகிப்பதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வங்கிகள் மட்டுப்படுத்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்காக மாத்திரம் திறந்திருப்பதோடு, இணையவழி சேவையைத் தொடர ஊக்குவிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவை வழங்குபவர்கள் மற்றும் நடமாடும் விநியோக சேவைகளில் ஈடுபடுவோருக்கு போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா அல்லாத மரணங்களை 24 மணி நேரத்துக்குள் அடக்கம் அல்லது தகனம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து அத்தியாவசிய தேவைக்காக ஒருவர் வெளியேற முடியும் என்பதோடு, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியேறுவதைத் முற்றாக தவிர்த்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மத ரீதியான ஒன்றுகூடல்கள், சமூக ஒன்றுகூடல்கள், ஹோட்டல்கள், விடுதிகள், சந்தைகள், மேலதிக வகுப்புகள், விளையாட்டு நிகழ்வுகள் போன்றன தொடர்ந்தும் மூடப்பட வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.