இனிவரும் நாட்களில், இந்நாட்டை நீண்ட காலத்துக்கு மூடி வைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின், நாட்டிலுள்ள அனைவரும், மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்குத் தயாராக வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி தடுப்பூசி ஏற்றுவதேயாகும் என்று, உலக சுகாதார ஸ்தாபனம், வைத்திய நிபுணர்கள் மற்றும் உலகத் தரம்வாய்ந்த வேலைத்திட்டத்தினூடாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, இதன்படி நாட்டு மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி இது வரையில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 98 சதவீதமானோருக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதோடு, அவர்களில் 43 சதவீதமானோருக்கு இரண்டாம் தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது எனவும் செப்டெம்பர் 10ஆம் திகதிக்குள், 100 சதவீதமானோருக்கு இரண்டு தடுப்பூசிகளும் ஏற்றப்படும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதேவேளை நாட்டை நாம் அடிக்கடி மூட நடவடிக்கை எடுத்தமையினால் பாரிய பொருளாதார பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலைமையில் நாட்டை மீண்டும் ஒரு முறை முற்றாக முடக்கினால், இந்நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும். அது, இந்த நாடு பொறுத்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலை அல்ல.
விசேடமாக, ஏற்றுமதித் தொழிற்றுறையில் ஈடுபட்டிருக்கும் ஆடைத் தொழிற்றுறைக்கு, பாரியளவு ஏற்றுமதிக் கட்டளைகள் கிடைத்துள்ளன. அந்தக் கட்டளைகளை உரிய நேர காலத்துக்கு வழங்க முடியாது போனால், பாரியளவு அந்நியச் செலாவணியை நாம் இழங்க வேண்டிய ஏற்படும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்த நாட்டை முழுமையாக மூடுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பில் பொதுமக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், மீண்டும் இந்த நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாகச் சரிவடையச் செய்யும் நிலைமைக்குச் செல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களின் போது, நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோரை, வாரத்துக்கு ஒரு முறையேனும் அன்டிஜன்ட் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதாரத் துறையினருக்கு நான் ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.
இனிவரும் நாட்களில், இந்நாட்டை நீண்ட காலத்துக்கு மூடி வைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின், நாட்டிலுள்ள அனைவரும், மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்குத் தயாராக வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறான முக்கியமான தருணத்தில், நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரும், இந்தத் தீர்மானமிக்க நிலைமையைப் புரிந்துகொண்டு, திட்டமிட்ட முறையில் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும். அதனால், ஒரு குழுவாக, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தோற்கடிப்பதற்கு ஒன்றிணைந்துப் பணியாற்ற முன்வருமாறு, அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.