November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊரடங்கு காலத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி

vaccination New Image

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் இதுவரையில் கொவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கையெடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இன்று இரவு 10 மணி முதல் இம்மாதம் 30ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை, நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கானது, இதுவரையில் தடுப்பூசி ஏற்றப்படாத 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதை இலக்காகக் கொண்டது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன்படி செப்டம்பர் முதலாம் திகதிக்கு முன்னர், அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசியை வழங்கி முடிக்குமாறு, இன்று நடைபெற்ற கொவிட் தடுப்பு செயலணிக் கூட்டத்தில் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் கிராமிய கொவிட் ஒழிப்புக் குழுக்கள் மூலம் இந்த நபர்களை அடையாளம் கண்டு தடுப்பூசி ஏற்ற, 23ஆம் திகதி திங்கட் கிழமைக்கு முன்னர் சுகாதாரப் பிரிவுக்கு அறிக்கை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், 1906 என்ற அவசர இலக்கத்துக்கு அல்லது தேசிய கொவிட் ஒழிப்பு மையத்துடன் தொடர்புகொண்டு பதிவு செய்யும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தடுப்பூசித் திட்டத்தை, இராணுவத் தளபதியின் மேற்பார்வையின் கீழ், சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்படி மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலத்தில், விவசாயம், ஆடை மற்றும் நிர்மாணத் தொழில்கள், ஏற்றுமதித் தொழில்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசியச் சேவைகள், விமான நிலையங்கள் மற்றும் விமான நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகப் பேணவும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்டத்தை அமுல்படுத்துமாறும், ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.