கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அடையாளம் காணப்பட்டாலும், நாட்டில் இன்னும் சமூக பரவல் ஏற்படவில்லை என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள அவர்,
தொழில்நுட்ப ரீதியாக, சமூக பரவுதலுக்கும் நோயாளிகள் சமூகத்தில் இருந்து கண்டறியப்படுவதற்கும் வித்தியாசம் இருப்பதாக கூறியுள்ளார்.
தற்போது, நாட்டில் கொரோனா வைரஸின் சமூகப் பரவல் இல்லை, இருப்பினும் சமூகத்திலிருந்து பல தொற்றாளர்கள் கண்டறியப்படுகின்றனர்.
இந்த நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது என்ற உண்மையை அவர் ஒப்புக் கொண்டார்.
கடந்த காலத்தில் பொதுமக்களின் திட்டமிட்ட செயல்களுக்கு, தற்போது விலை கொடுக்கப்படுகிறது. மக்கள் பொறுப்பற்ற முறையிலும், அலட்சியமாகவும் சுகாதார விதிமுறைகளை புறக்கணித்து வருவதை நாங்கள் பார்த்தோம்.
எனவே, சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் நிலைமை மிகவும் பயங்கரமாக மாறும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.