இலங்கையில் வணிக வங்கிகளினால் தனிப்பட்ட பாவனைக்காக விநியோகிக்கப்படும் கடனட்டைகளை வர்த்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியாது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஆனால் தனிப்பட்ட ரீதியில் இணையத்தளங்களின் ஊடாகவோ அல்லது வேறு வழியிலோ பொருட்களை கொள்வனவு செய்வதற்கோ, வேறு கட்டணங்களை செலுத்துவதற்கோ எந்தவித தடையும் கிடையாது என்று மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர் டி.எம்.ஜே.வை.பி.பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடன் அட்டைகள் மூலம் வெளிநாட்டு பணம் செலுத்தும்போது வங்கிகள் சில வரம்புகளை விதித்துள்ளமை தொடர்பில்,நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“கடனட்டை மூலம் பணம் செலுத்துவது தொடர்பாக எந்த புதிய கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை, அல்லது கடனட்டை மூலம் பணம் செலுத்துவதை நிறுத்துமாறு நாங்கள் நுகர்வோரிடம் கேட்கவுமில்லை. தற்போதைய விதிமுறை என்னவென்றால், நீங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பொருட்களை வாங்க கடனட்டையை பயன்படுத்தலாம். ஆனால் வர்த்தக நோக்கத்திற்காக வாங்கப்பட்ட பொருட்களுக்கு பணம் செலுத்த அதைப் பயன்படுத்த முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.