
ஈஸ்டர் தாக்குதலுக்கான பழியை பொலிஸ் அதிகாரிகள் மீது சுமத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவருவது தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர் இன்று (19) அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்து தெரியப்படுத்தியுள்ளனர்.
மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் மொனராகலை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சிசிர குமார ஹேரத், நுவரெலியா மாவட்டத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நந்தன அத்துகோரல, முல்லைத்தீவு மாவட்டத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நுவன் குமாரசேகர உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் இன்று அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய வராககொட ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்து குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இங்கு தொடர்ந்து பேசிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்,
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற புலனாய்வு தகவல் குறித்து அப்போதைய அரசாங்கத்தாலும், பாதுகாப்பு அமைச்சினாலும் பொலிஸாருக்கு உரிய முறையில் தெரியப்படுத்தவில்லை.
குறிப்பாக, யுத்தத்திற்குப் பிறகு நாட்டில் அமைதியான சூழல் நிலவியதுடன், நல்லிணக்கம் என்ற தொனிப் பொருளில் அப்போதைய அரசாங்கம் மும்முரமாக செயல்பட்டது.
இதில் முஸ்லிம் மக்களுடன் மிகவும் நெருக்கமான ஒரு தொடர்பு இருந்த காரணத்தால் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் ஆழமான எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. இந்தப் பின்னணியில் தான் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றது. இதனால் சுமார் 300 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள்.
எனவே, பொலிஸ் அதிகாரிகள் எவரும் இந்தத் தாக்குதலுக்கு பங்களிப்பினை வழங்கவில்லை. குறிப்பாக ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளில் பணிபுரிந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் நடத்த வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழுவினால் உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதனால், தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளில் பணிபுரிந்த பொலிஸ் அதிகாரிகள் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் அவர்களது ஓய்வும், ஓய்வூதிய கொடுப்பனவும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
எனவே, தீவிரவாத செயல்பாடுகளுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் இருந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.
ஆனால், எந்தவொரு தவறும் செய்யாத அப்பாவி பொலிஸ் அதிகாரிகளின் வாழ்க்கையை விசாரணைகள் என்ற பெயரில் கேள்விக்குறியாக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மகாநாயக்க தேரர்களாகிய நீங்கள் எடுக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.