
நாடளாவிய ரீதியில் 209 மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொற்றுக்குள்ளான மருத்துவர்களில் 30-40 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஒரு மருத்துவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
இவர்களில் கொழும்பு தேசிய மருத்துவமனையைச் சேர்ந்த 27 மருத்துவர்களும், ஹோமாகம மருத்துவமனையைச் சேர்ந்த 17 மருத்துவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 3 மருத்துவர்கள் இதுவரை கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் 1000 தாதியர்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் அகில இலங்கை தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதுமாத்திரமின்றி, 37 பொது சுகாதார பரிசோதகர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இதில் காலி கராப்பிட்டிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் இதுருவ பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.