November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கான நேரடி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்தது குவைத்

Photo: Kuwait Airways Colombo Facebook

இலங்கை, பங்களாதேஷ் எகிப்து, இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான நேரடி வர்த்தக விமான சேவைகளை மீண்டும் தொடங்க குவைத் தீர்மானித்துள்ளது

கொரோனா வைரஸ் அவசர குழு விதித்த விதிமுறைகளுக்கு இணங்க இந்த முடிவு உறுதி செய்யப்பட்டுள்ளதாக குவைத் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தாரெக் அல்-மஸ்ரெம் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தை தவிர, மற்ற ஐந்து நாடுகள் குவைத்தில் உள்ள குடியிருப்பாளர்களிடையே மிகப்பெரிய சமூகங்களாக வாழ்ந்து வருகின்றனர். மொத்தமாக, 3.3 மில்லியன் மக்கள் தொகையில், குவைத் நாட்டில் ஆறு நாடுகளை சேர்ந்த 2.3 மில்லியன் மக்கள் உள்ளனர்.

இதேவேளை, கடந்த ஆண்டு கொரோனா தொற்று உலக அளவில் பரவ ஆரம்பித்திருந்த நிலையில், கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் குவைத்தின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கான நேரடி விமான சேவையை குவைத் உடனடியாக நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் அங்கீகரிக்கப்பட்ட நான்கு தடுப்பூசிகளான பைசர், ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனிகா, மொடர்னா மற்றும் ஜொன்சன் அன்ட் ஜொன்சன் தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றின் ஒரு டோஸையாவது அல்லது குவைத்தில் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசிகளான சினோபார்ம், சினோவெக் மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளில் ஒன்றையாவது செலுத்திக் கொண்ட குடிமக்களுக்கு குவைத்தில் நுழைய அந்நாட்டு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதனிடையே, குவைத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சீராக குறைந்து வருவதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்து நாட்களாக பதிவான புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 400க்கும் குறைவாக உள்ளது. மருத்துவமனைகளில் 398 நோயாளிகளும், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 182 நோயாளிகளும் மட்டுமே உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களில் வெறும் 14 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. எனவே, இது கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் மிகப்பெரிய சரிவை காண்பித்துள்ளது.

இதன்படி, ஞாயிற்றுக்கிழமை முதல் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பமாகும் என்று குவைத்தின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

இதேவேளை, குவைத்தின் அல்-ஜரிடா அரபு நாளிதழும் குவைத் விமான நிலையத்தின் செயல்திறனை 10,000 பயணிகளிடமிருந்து 15,000 பயணிகளாக அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.