புதிய அரசியல் அமைப்பு உருவாக்க விடயத்தில் நீண்ட காலம் கடத்தப்பட்டுள்ள நிலையில் இனியும் கால தாமதங்களை ஏற்படுத்த வேண்டாம், விரைவில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்க விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.எ.சுமந்தினுக்கும் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கும் இடையில் அமெரிக்க தூதுவர் இல்லத்தில் அண்மையில் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றது.
அரச தரப்பின் முழுமையான இணைக்கப்பாட்டில் இந்த சந்திப்பிற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றவுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளை தாமதப்படுத்தக்கூடாது, 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு இரண்டு மாதத்தல் நிறைவேற்றப்பட்டது. ஆனால் 38 ஆண்டுகளாக எமது நிலைப்பாடுகள் குறித்து பேசிக்கொண்டுள்ளோம். இவற்றில் எத்தனையோ இணக்கப்பாடுகள் உள்ளன. ஆகவே இதனை பூர்த்தி செய்வதில் சிரமங்களோ கால தாமதமோ இருக்கக்கூடாது என கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதிக்கு சம்பந்தன் அனுப்பியுள்ள கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு வருமாறு,
2021 ஜூன் 16 ஆம் திகதி மாலை 4 மணிக்கு சனாதிபதி செயலகத்தில் தாங்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் சந்திப்பதாக 2021.06.07 ஆம் திகதிய கடிதம் மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டது.
அச்சந்திப்பு ஒத்திவைகக்கப்பட்டதாகவும் அச்சந்திப்பிற்கு விரைவில் பிறிதொரு திகதி வழங்கப்படுமெனவும் எனக்கு 15 ஆம் திகதி மாலை தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டது.
இது, அடுத்த நாள் காலையில் மேலுமொரு தொலைபேசி அழைப்பின் மூலமாக உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர். சொல்லப்பட்ட சந்திப்பை விரைவாக நடத்துவதற்கான திகதி மீள நிர்ணயிக்கப்படும் என்று அறிவிக்கும் இரண்டு கடிதங்கள் எனக்குக் கிடைக்கப்பெற்றன.
அதற்குமேல் எனக்கு எவ்வித தொடர்பாடல்களும் கிடைக்கவில்லை. தாங்கள் விரும்புகின்றபோது தங்களை நாங்கள் சந்திப்போம் என்பதை தங்களுக்கு இத்தால் அறியத் தருகிறேன்.
எமது நாடு சுதந்திரத்திலிருந்து பின்வரும் மூன்று அரசியலமைப்புக்களைக் கொண்டிருந்ததென்பதை நான் இங்கு குறிப்பிடுவேனாக:
1). ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கத்தினால் அவர்களுடைய சொந்த அரசியலமைப்பு வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சுதந்திரத்திற்கு முன்னர், தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு.
இது, தற்போது பெருமளவு மாற்றமடைந்துள்ளது. ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்து ஆகியவற்றிற்கு விரிவான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் தமது சுயாதீனமான தனித்துவங்களைக் கொண்ட ஸ்கொட்லாந்து மற்றும் அயர்லாந்து மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்துவரும் பகுதிகளாகும். இப் பிரதேசங்கள் இரண்டும் தற்போது தமது சொந்த சுயாதீனமான சட்டவாக்க சபைகளையும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலமைச்சர்களையும் அமைச்சரவைகளையும் கொண்டுள்ளன.
அவை, கிரமமான ஜனநாயக நடைமுறைகளில் வழங்கப்பட்ட தத்தமது மக்களின் ஜனநாயக தீர்ப்புகளுக்கேற்ப ஐக்கிய இராச்சியம் என்ற வரையறைக்குள் ஆளப்படுகின்றன. இதனையே தமக்கென சொந்த சுயேட்சையான தனித்துவத்தைக் கொண்ட தமிழ் மக்களும் ஓர் ஐக்கிய பிரிபடாத இலங்கைக்குள் தமது வரலாற்று ரீதியான வாழ்விடப் பிரதேசங்களில் கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக தமது ஜனநாயக தீர்ப்புகளின் மூலம் கோரி வருகின்றனர்.
2). பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறக்கூடியதாக இருந்த ஒரு பெரும்பான்மைக் கட்சியினால் கருத்தொருமைப்பாட்டை நாடாமலே இரண்டு வருடங்களுக்குள் நிறைவேற்றப்பட்ட 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியலமைப்பு. தமிழ் மக்கள் 1972ஆம் ஆண்டின் அரசியலமைப்பு தயாரிப்பிற்கு பங்களிப்புச் செய்யவில்லை.
3). பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறக்கூடியதாக இருந்த ஒரு பெரும்பான்மைக் கட்சியினால் கருத்தொருமைப்பாட்டை நாடாமலே ஒரு மாதத்திற்கு குறைவான காலத்தில் நிறைவேற்றப்பட்ட 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு. தமிழ் மக்கள் 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பு தயாரிப்பிற்கு பங்களிப்புச் செய்யவில்லை.
1994ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வெரு தேசிய தேர்தலிலும் இறைமை கொண்ட மக்களினால் 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளபோதிலும், 1978ஆம் ஆண்டிலிருந்து நாம் அவ் அரசியலமைப்பின் கீழேயே ஆளப்பட்டு வருகிறோம். இவ்வாறு, மக்களது விருப்பத்தையோ சம்மதத்தையோ பெற்றிராத ஓர் அரசியலமைப்பின் கீழ் நாம் ஆளப்படுகிறோம். 1972 ஆம் ஆண்டின் முதலாவது மற்றும் 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்புகளை தமிழ் மக்கள் 1956 லிருந்து தமது வாழ்விடப் பகுதிகளில் நிராகரித்துள்ளனர்; அவர்களும் தமது விருப்பமோ சம்மதமோ இன்றியே ஆளப்படுகின்றர்.
மேல் குறிப்பிடப்பட்டவை இலங்கை இணங்கி ஏற்றுக்கொண்டுள்ள சர்வதேச சமவாயங்களினதும்; ஆவணங்களினதும் மீறல்களாக அமைகின்றன.
1983 ஆம் ஆண்டின் தமிழருக்கெதிரான படுகொலைகளின் பின்னர்;, இலங்கையின் தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியா தனது உதவியை வழங்கியது; இலங்கை அதனை ஏற்றுக் கொண்டது; அரசியலமைப்பை வகுக்கும் நடைமுறை தொடங்கியது. மாநாடுகள், சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் ஆகியன இலங்கை, இந்தியா, கடல்கடந்த வெளிநாடுகள் என பல இடங்களிலும் இடம் பெற்றன் இலங்கை அரசாங்கம், அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகள் அவற்றில் பங்குபற்றினர்.
இந்தியா, நோர்வே, ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன அடங்கிய இணைத்தலைமை நாடுகள் மற்றும் ஏனைய நாடுகள் அதில் சம்பந்தப்பட்டிருந்தன. அவற்றுள் பலவும் இந்நடைமுறை தொடர்பாகப் பகிரங்க அறிக்கைகளை விடுத்தன. ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள பேரவை இதில் ஈடுபட்டனர்.
இலங்கை அரசாங்கம் இவ்வமைப்புகளுக்கு பகிரங்கமாகவே பல வாக்குறுதிகளை வழங்கியது. இவையனைத்தும் பதிவு செய்யப்பட்ட விடயங்களாகும்; அவை நிறைவேற்றப்படவேண்டும். இவற்றுள் சில பற்றி நான் எனது முன்னைய கடித்தில் விரிவாகக் குறிப்பிட்டிருப்பதனால், அவற்றை மீண்டும் குறிப்பிடமாட்டேன்.
அரசியலமைப்பிற்கான 13வது திருத்தம் 1988 இல் நிறைவேற்றப்பட்டது. அது போதாதென கருதப்பபட்டது. 1988 லிருந்து அடுத்தடுத்து வந்த ஒவ்வவொரு அரசாங்கமும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதோடு, காத்திரபூர்வமான அதிகாரப் பரவலாக்கத்தை எற்படுத்துமுகமாக 13 வது திருத்ததின்மீது மேலும் கட்டியெழுப்புவதற்கும் இணங்கின. இந்நடைமுறைகளிலிருந்து பெருமளவு கருத்தொருமைப்பாடு பெறப்பட்டது.
அரசியலமைப்பைத் தயாரிக்கும் நடைமுறை இனியும் தாமதிக்கப்படலாகாது. 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பும் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு முறையே 2 வருடங்களுக்கும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தையே எடுத்தன. தற்போதைய நடைமுறை கடந்த முப்பதிரெண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
இந்நடைமுறை இனியும் தாமதிக்கப்படாதிருப்பதை உறுதிப்படுத்துமாறு நான் தங்களை வினயமாகக் கேட்டுக்கொள்கிறேன்.