November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எதிர்க்கட்சித் தயார்”; ஹரின் பெர்னாண்டோ

அரசியல் பிரச்சினைகளை தவிர்த்து, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்க்கட்சி தயாராக இருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தனியார் வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளை போன்று இலங்கையும் முகங்கொடுத்துள்ள கொரோனா வைரஸுக்கு எதிரான அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது தான் எதிர்க்கட்சியாக நாங்கள் இந்த நேரத்தில் செய்ய வேண்டிய பங்களிப்பாகும் என்று அவர் அதன்போது குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரும் இதுதொடர்பில் பல விடயங்களைப் பேசி வருகின்றார். பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் பல குறைபாடுகளை சுட்டிக்காட்டி வருகின்றார். எனவே இவ்வாறான நெருக்கடியான நிலையில் நாங்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், நேற்று ஜனாதிபதியை சந்தித்து இதுதொடர்பில் பல விடயங்களை கலந்துரையாடியுள்ளார். எனவே நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும், இந்த கொரோனாவை கட்டுப்படுத்த, அதிலிருந்து எமது மக்களைப் பாதுகாக்க பங்களிப்பு செய்ய வேண்டும் என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புகின்ற நிலைமையை ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.

உண்மையில் இந்த வைரஸ் எவ்வளவு காலம் இலங்கையில் இருக்கும் என எம்மால் ஒன்றும் கூறமுடியாது. எனவே, கட்சி பேதமின்றி இந்த வைரஸைக் கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஹரின்பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.