இலங்கையில் கொவிட் தொற்றாளர்களை அவர்களின் நோய் நிலைமைக்கு ஏற்ப சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்புதல் அல்லது வீட்டினுள் வைத்து பராமரிப்பது தொடர்பாக புதிய வேலைத்திட்டமொன்று இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக கொவிட் தடுப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி 1904 என்ற இலக்கத்திற்கு தனது நோய் நிலைமை குறித்து குறுந்தகவல் மூலம் தொற்றாளர் அறிவிக்க முடியும்.
இதற்கமைய சுவாசிப்பதற்கு கஸ்டமான நோயாளர்கள், காய்ச்சல் நிலையில் இருப்பேர் மற்றும் எந்தவித நோய் அறிகுறியும் தென்படாதோர் என்று மூன்று பிரிவுகளில் குறித்த இலக்கத்திற்கு குறுந்தகவல்கள் மூலம் அறிவிக்க முடியும்.
சுவாசிப்பதற்கு கஸ்டமான நோயாளர்கள் B <இடைவெளி> வயது <இடைவெளி> அடையாள அட்டை இலக்கம் <இடைவெளி> முகவரி என்பதனை பதிவிட்டு குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்ப வேண்டும்.
காய்ச்சல் நிலையில் இருப்போர் B <இடைவெளி> வயது <இடைவெளி> அடையாள அட்டை இலக்கம் <இடைவெளி> முகவரி என்பதனை பதிவிட்டு அனுப்ப வேண்டும்.
எந்தவித நோய் அறிகுறியும் தென்படாதோர் C <இடைவெளி> வயது <இடைவெளி> அடையாள அட்டை இலக்கம் <இடைவெளி> முகவரி என்பதனை பதிவிட்டு அனுப்ப வேண்டும் என்று கொவிட் தடுப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கிடைக்கப்பெறும் தகவல்களுக்கு அமைய அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டிய நோயாளர்கள் அழைத்துச் செல்லப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்களை 1390 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என்று கொவிட் தடுப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.