July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெல்டா மாறுபாடுகளை கண்டறிய விசேட சோதனை ஆரம்பம்!

வீரியமிக்க டெல்டா மாறுபாடுகள் கொழும்பு மற்றும் பிற பகுதிகளில் மேலும் பரவி உள்ளதா என்பதை அறிய இன்றும் (18) நாளையும் (19) விசேட ஆய்வுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நேயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ ஆய்வுப் பிரிவின் பணிப்பாளரான வைத்தியர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய முன்னெடுக்கப்படும் இந்த பரிசோதனைகள் தொடர்பான விரிவான அறிக்கை சோதனைகள் முடிவடைந்ததன் பின்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள வீரியமிக்க SA 222V, SA 701S மற்றும் SA 1078S ஆகிய மூன்று வகையான டெல்டா மாறுபாடுகள் குறித்து முதன் முதலில் பேராசிரியர் சந்திம ஜீவந்தர அவரது ஆராய்ச்சி குழு ஆராய்ச்சிகளை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில் நேற்று (17) இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன்ன, கடுமையாக பரவும் டெல்டா வைரஸ் மாறுபாடுகள் குறித்து பாராளுமன்றத்தில் முதல் முறையாக அறிவித்திருந்தார்.

குறித்த வைரஸானது 60 முதல் 70 வீத வேகத்தில் பரவி வருவதாக விசேட நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், இது ஒக்சிஜனுடன் போராட வேண்டிய நிலைமையை ஏற்படுத்தும் வீரியம் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, கொழும்பின் பல பகுதியிலிருந்து கொவிட் தொற்றாளர்களிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகள் பெரும்பாலும் மரபணு பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டதாக பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.