November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வீட்டில் சிகிச்சை பெறும் கொவிட் நோயாளிகளுக்கான சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெறுகின்றவர்கள் குறைந்தது 14 நாட்கள் அல்லது அறிகுறிகள் குணமாகும் வரை வீட்டில் இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அதிலிருந்து பூரண குணமடைந்த பிறகு வீட்டில் தங்கயிருக்க வேண்டிய கட்டாய நாட்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை.

ஆனால் அறிகுறிகள் மறைந்த பிறகும், பல வாரங்களுக்கு தேவையற்ற வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதார அமைச்சுகூறியுள்ளது.

தற்போது நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான பெருமளவானோர் மருத்துவ ஆலோசனையின் பேரில் வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருப்பினும், அத்தகைய நோயாளிகள் குணமடைந்தவுடன் பிசிஆர் அல்லது விரைவான அன்டிஜன் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட மாட்டார்கள்.

இத்தகைய சூழ்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் வீட்டில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த பிறகு எப்போது வெளியில் செல்ல முடியும் என்பது தொடர்பில் சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன்படி பிசிஆர் பரிசோதனையின் பிறகு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டால் அவர் கட்டாயம் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

எனினும், மேற்குறிப்பிட்ட 14 நாட்களுக்குப் பிறகும் நோய் அறிகுறிகள் தொடர்ந்து காணப்பட்டால் மருத்துவரை அனுகி உரிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது மாத்திரமல்லாது தொடர்ந்து வீட்டில் சுய தனிமைப்படுத்தலை கடைபிடிப்பது மிகவும் நல்லது எனவும் அவர் தெரிவித்தார்.