July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கான் நிலவரம்: இலங்கையின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பார்!

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்த இலங்கையின் நிலைப்பாடு வெளிவிவாகர அமைச்சரினால் அறிவிக்கப்படும் என்று அமைச்சரவை இணை பேச்சாளரான ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் அவர் இதனை கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து அங்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சரவை இணை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும, ”சார்க் நாடுகள் என்ற ரீதியில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கவலையடைகின்றோம்” என்றார்.

இதேவேளை ”இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடுமாறு ஜனாதிபதி வெளிவிவகார அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்படி இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் இன்றைய தினத்திற்குள் அறிவிப்பார்” என்றும் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.