February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மேலும் நான்கு சுற்றுச்சூழல் மண்டலங்கள் அடையாளம்

இலங்கையில் மேலும் நான்கு முக்கிய சுற்றுச்சூழல் மண்டலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த புதிய உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் மண்டலங்கள் மானேவ, கங்கேவாடிய, எழுவன்குலம மற்றும் கல்னேவ ஆகிய பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதற்குமுன் உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் மண்டலங்கள் என அடையாளம் காணப்பட்ட இடங்கள் உரிய முறையில் பெயரிடப்படாததால் அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்தும் போது குறித்த பகுதிகள் சேதமடைந்த செய்திகள் பல கிடைக்கப் பெற்றுள்ளதாக சுற்றாடல் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, சுற்றாடல் அமைச்சு முக்கியமான சுற்றுச்சூழல் மண்டலங்களை அடையாளம் கண்டு அவற்றை உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் மண்டலங்களாக அறிவிக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் அறிவுறுத்தலின் பேரில் சுற்றாடல் அமைச்சின் பல்லுயிர் பிரிவினால் (BIO-DIVERSITY UNIT)  இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும்போது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதத்தைத் தடுத்து அந்த வேலைத் திட்டங்களைத் திட்டமிடுவதை எளிதாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் என சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.

இருப்பினும், புதிய திட்டத்தின் கீழ், சுற்றாடல் அமைச்சு அந்த முக்கியமான சுற்றுச்சூழல் மண்டலங்களை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்.எனவே அந்த சுற்றுச்சூழல் மண்டலங்களை அழிக்க எந்த தனி நபருக்கோ அல்லது நிறுவனத்துக்கோ சட்டத்தால் அனுமதிக்கப்படாது.