அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மீண்டும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியால் நேற்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 198.19 ரூபாவாக காணப்பட்டதுடன், விற்பனை விலை 202.89 ரூபாவாக இருந்தது.
எனினும், தற்போது அமெரிக்க டொலர் ஒன்று இலங்கையில் 211 ரூபா முதல் 215 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே, இலங்கை மத்திய வங்கி அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியை 202.89 ரூபாவாக நிர்ணயித்துள்ள போதும், தனியார் வங்கிகள் தற்போது இந்த விகிதங்களை கைவிட்டுள்ளதாகத தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உடனடியாகச் செயற்படும் விதத்தில் இலங்கை ரூபாவின் பெறுமதியை குறைக்குமாறு உரிமம்பெற்ற வங்கிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.