இலங்கையில் இந்த ஆட்சி தொடருமாக இருந்தால் ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் மக்கள் விமானத்தில் ஏறி வெளிநாடுகளுக்கு செல்வதை போன்ற நிலைமை இலங்கையிலும் ஏற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற வைரஸ் தொற்று (கொவிட்-19) தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்து பேசிய அவர்;
அமைச்சரவையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது சீட்டுக் கட்டு விளையாடுவதை போன்றது. அந்த சீட்டுக்கட்டு விளையாடும் போது அதில் உள்ள ஜோக்கர்களை வீசி விட்டே விளையாடுபவர்களிடையே அவை பகிரப்படும்.தனது அமைச்சை மாற்றப் போவதாக தான் அறிந்திருக்கவில்லை என்று முன்னாள் சுகாதார துறை அமைச்சர் பவித்திரா தேவி வன்னியாராச்சி கூறியுள்ளார். அவருக்கே தெரியாது என்றால் அந்த சீட்டுக் கட்டு விளையாட்டை போன்றதுதான் இதுவும்.
நான் அந்த ஜோக்கர்கள் இருவரை வீசிவிட்டே அதனை விளையாடுவார்கள் என்று கூறியமைக்கு,இந்த நாட்டில் தீர்மானங்களை எடுப்பவர்கள் ஜோக்கர்களே ஆகும்.அதனால் தான் நான் அவ்வாறு கூறினேன்.அவர் தன்னை பழிக்கடாவாக்குவது தொடர்பில் கூறியிருந்தார்.உண்மையில் அவர்கள் மக்களையே பலி கடாவாக்குகின்றனர்.
தப்போது ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இருந்து விமானத்தில் தொங்கிச் செல்லும் மக்கள் அதில் இருந்து விழுகின்றனர்.இன்னும் சில காலத்திற்கு இலங்கையில் இவர்கள் ஆட்சி செய்தால் நிச்சயமாக இலங்கை மக்களும் காபூலில் சென்றதை போன்று விமானத்தில் செல்லும் நிலைமை ஏற்படும்.
ஒரு காலத்தில் தமிழர்கள் மட்டுமே தஞ்சம் கோரி இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றனர்.ஆனால் இந்த அரசாங்கம் இப்படியே போகுமாக இருந்தால் எதிர்காலத்தில் விமானம் ஏறி சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்கள் சகலரும் தஞ்சம் கோரி வெளிநாடுகளுக்கு செல்லும் நிலைமை ஏற்படும்.அந்தளவுக்கு நாட்டின் நிலைமை உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.