July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“பொருளாதாரத்தை தக்கவைக்க மக்களை பலிகொடுக்க அரசாங்கம் தயாராகிவிட்டது”

நாளாந்தம் பதிவாகும் கொவிட் மரண எண்ணிக்கையை மாற்றியமைத்து நாட்டின் உண்மை நிலைமையை மூடி மறைக்கும் வேலையை இராணுவம் முன்னெடுத்து வருவதாகவும், பொருளாதாரத்தை தக்க வைக்க மக்களை பலி கொடுக்கும் நிலையை அரசாங்கம் உருவாக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான ராஜித சேனாரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கி ஒன்றிணைந்து கொவிட் வைரஸ் தொற்று குறித்து மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின் படி, ஒரு நாளுக்கான கொவிட் மரணங்களின் எண்ணிக்கையை அவதானித்தால் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது.

வாரத்துக்கான மரணங்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்தால் இலங்கை நான்காம் இடத்தில் உள்ளது.மரண எண்ணிக்கை அதிகரிக்கும் நாடுகளில் இலங்கையே முதலாம் இடத்தில் உள்ளது. இந்த கணிப்பீடு ஒரு மில்லியனுக்கு என்ற ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜோன் ஹோப்கிங்க்ஸ் பல்கலைக்கழக ஆய்வின் பிரகாரம் நாளாந்த புதிய கொவிட் மரண அதிகரிப்பானது 5.72 வீதமென கூறுகின்றது.ஐக்கிய அமெரிக்கா,இங்கிலாந்து,ஜெர்மனி ஆகிய நாடுகள் அனைத்துமே எமக்கு பின்னால் உள்ளன.நாம் இந்தியாவை விடவும் 15 வீதம் அதிகரிப்பில் சென்று கொண்டுள்ளோம்.இந்த தரவுகளை அரசாங்கம் மறைத்து செயற்பட்டுக் கொண்டுள்ளது.

நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை, மக்களே தாமாக தீர்மானம் எடுக்கும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.பொருளாதாரத்தை தக்கவைக்க மக்களை பலி கொடுக்கும் நிலையை அரசாங்கம் உருவாக்கியுள்ளதாக நிபுணர்களே சுட்டிக் காட்டுகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.