எமது நாட்டின் சுகாதார கட்டமைப்பை பலப்படுத்த சர்வதேச புலம்பெயர் மக்களின் முழுமையான உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க சகல தூதரகங்களுக்கு ஒரு இலக்கை கொடுத்து சர்வதேசத்தில் வாழும் புலம்பெயர் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
பொது மக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற போதிலும்,தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் மேலும் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும். இதில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள நிதி இல்லையென்றால், அதனை பெற்றுக் கொள்ள இலகுவான வழிமுறைகள் உள்ளன.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் பல நிறுவனங்களுக்கு வரி சலுகைகளை கொடுத்தனர்.அவர்களிடம் வலியுறுத்தி தடுப்பூசிகளை பெற்றுக் கொடுக்க வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல் தூதரகங்கள் மூலமாக வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும்.எமது வைத்திய துறைக்கு தேவையான இயந்திரங்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.அதற்கு தமிழ்,சிங்கள, முஸ்லிம் புலம்பெயர் அமைப்புகள் எமக்கு உதவ தயாராக உள்ளனர்.எமது நாட்டின் சுகாதார கட்டமைப்பை பலப்படுத்த சர்வதேச புலம்பெயர் மக்களின் முழுமையான உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே சகல தூதரகங்களுக்கு ஒரு இலக்காக இதனை கொடுத்து சர்வதேசத்தில் வாழும் புலம்பெயர் மக்களின் உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.