கடந்த காலங்களில் ஆர்ப்பாட்டங்களை செய்து நாட்டில் கொவிட் வைரஸ் பரவலுக்கு காரணமாக செயற்பட்ட எதிர்கட்சியினர் இன்று நாட்டை முடக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டை நெருக்கடி நிலைக்குள் தள்ள வேண்டும் என்ற திட்டமிட்ட சூழ்ச்சியில் இவர்கள் செயற்பட்டார்களா? என்ற சந்தேகம் எழுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சிகள் கூறுவதை போன்று நாட்டை முடக்கினால் நாளாந்த வருமானத்திற்காக போராடும் மக்களின் நிலைமை என்னவாகும். எதிர்க்கட்சிகள் வெறுமனே தமது அரசியலுக்காக கருத்துக்களை முன்வைக்க வேண்டாம்.நாட்டின் சுற்றுலாத்துறை முழுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது.அதனை மீட்டெடுக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆராய்ந்து வருகின்றோம் எனவும் அவர் கூறினார்.
எமது அரசாங்கம் சரியான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும், அதற்கான பணம் வேண்டும். அதனை தேடிக்கொள்வதில் நெருக்கடி நிலைமைகள் உள்ளன.கடந்த கால கொள்ளைகளும் ஊழல்களும், தவறான பொருளாதார கொள்கையுமே இன்று எமக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.