July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் விளக்கமறியல் நீடிப்பு!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு நீதிவான் நீதிமன்றில் அசாத் சாலி முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு மற்றும் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்டார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கொள்ளுப்பிட்டியில் வைத்து மார்ச் மாதம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றத்திடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் அனுமதி கோரியிருந்த நிலையில், நீதிமன்றம் இதற்கான அனுமதியை வழங்கியிருந்தது.

முன்னதாக, ஷரிஆ சட்டம் மற்றும் நாட்டு சட்டம் தொடர்பில் அசாத் சாலி தெரிவித்த கருத்து அடிப்படைவாதத்தை தூண்டக்கூடியது மற்றும் பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கக் கூடியதாக இருந்ததன் காரணமாகத் தான் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்திருந்ததாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.