November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரியாஜ் பதியுதீனின் மனு நிராகரிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தான் மீண்டும் கைதுசெய்யப்படுவதைத் தடுத்து, உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரன் ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை விசாரணைக்குட்படுத்தாமல் நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

மேற்படி மனுவை கட்டணங்கள் எதுவுமின்றி இரத்துச் செய்யத் தீர்மானித்ததாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் உள்ளிட்ட நீதியரசர் குழாம் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட ரியாஜ் பதியுதீன், ஆறு மாதங்களின் பின்னர் செப்டம்பர் 29ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ரியாஜ் பதியுதீனின் விடுதலை நாட்டில் பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்ததோடு, அவர் மீண்டும் கைதுசெய்யப்பட வேண்டுமென்று ஆளும் கட்சியின் 100 உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மனுவொன்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ரியாஜ் பதியுதீனை விடுதலை செய்ததை நியாயப்படுத்த முடியாதென்று சட்டமா அதிபர் தப்புல லிவேரா மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் கைதுசெய்யப்படுவதைத் தடுக்கக் கோரி ரியாஜ் தாக்கல் செய்திருந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.