தாலிபான்களின் தொடர் போராட்டமும் கொள்கைப்பிடிப்பும் அவர்களின் இலக்கு நோக்கிய பயணமுமே அவர்களை வெற்றியடைய வைத்திருக்கின்றது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தலிபான்களின் இந்த செயற்பாடு சரியா பிழையா என்பது பிரச்சினையல்ல. சுதந்திர இயக்கங்களுக்கும் சுதந்திரத்துக்கு போராடுகின்ற இனங்களுக்கும் தலிபான்களின் விடுதலை ஒரு மாற்றத்தை தந்திருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் கொவிட் 19 தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே சிறீதரன் எம்.பி இவ்வாறு குறப்பிட்டுள்ளார்.
நாட்டில் புரையோடிப்போயுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்கட்டும், பிரதமராக இருக்கட்டும், சிங்கள தலைவர்களாக இருக்கட்டும்.சற்று சிந்தியுங்கள். இன்று உலக ஒழுங்குகள் மாறுகின்றன. உலக சூழல் மாறுகின்றது .எத்தனையோ சுதந்திர இயக்கங்களுக்கும் சுதந்திரத்துக்கு போராடுகின்ற இனங்களுக்கும் தாலிபான்களின் விடுதலை ஒரு மாற்றத்தை தந்திருக்கின்றது என்று அவர் அதன்போது தெரிவித்துள்ளார்.
ஒரு பெரிய நாட்டை அவர்களினால் மீட்டெடுக்க முடிந்திருக்கின்றது என்றால் அது ஒரு மாற்றம். இந்த உலக பந்தில் ஏற்பட்டிருக்கின்ற இராணுவ ரீதியிலான ,ஆயுதரீதியிலான ஒரு மாற்றம் என்றும் சிறீதரன் கூறியுள்ளார்.