நல்லூர் திருவிழாவினை முன்னிட்டு ஆலயத்தை சுற்றி ஏற்படுத்தப்பட்டிருந்த பயணத் தடைகளில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்று நிலைமையில் ஆலயப் பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள வீதித் தடைகளுக்கு உள்ளே அமைந்துள்ள கடைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பொதுமக்கள் தகுந்த சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிச் சென்று அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
விசேட பூஜை நேரங்களான காலை 04.00 – 5.30, காலை 10.00 – நண்பகல் 12.00, மாலை 04.00 – 06.00 ஆகிய நேரங்கள் தவிர்ந்த ஏனைய நேரங்களில் இவ்வாறு அனுமதி வழங்கப்படவுள்ளது.
அத்துடன் விசேட திருவிழா நாட்களில் மேற்படி அனுமதி வழங்கப்படமாட்டாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நடைமுறையில் தேவைப்படின் நாட்டின் சுகாதார நிலைமையின் அடிப்படையிலும் சுகாதார வைத்திய அதிகாரியின் மேலதிக பணிப்பின் அடிப்படையிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் திருவிழாவினை முன்னிட்டு ஏற்படுத்தப்பட்டிருந்த பயணத்தடைகளில் பொதுமக்களின் வேண்டுகோளை அடுத்து மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசாருடன் மாநகர முதல்வர் மணிவண்ணன் நேரில் சென்று கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.