முன்கள சுகாதார ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை வழங்க வேண்டிய அவசியம் உள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற சுகாதார பணியாளர்கள் கூட இப்போது கொவிட் தொற்று நோய்க்கு உள்ளாகி வருவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) சுட்டிக்காட்டியுள்ளது.
அவ்வாறு கொவிட் தொற்று சுகாதாரப் பணியாளர்களிடையே அதிகரிக்குமானால் சுகாதார துறை நெருக்கடியை சந்திக்க நேரிடும்.எனவே முன்கள பணியாளர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் எனவும் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
கொவிட் வைரஸின் புதிய விகாரத்தின் காரணமாக நாடு 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடலாம் எனவும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, அவ்வாறான ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ள நாட்டு மக்களினதும் சுகாதார பிரிவினரதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை வழங்குவதற்கான வாய்ப்பு குறித்து நிபுணர்கள் ஆராய வேண்டும் எனவும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.