ஆசிரிய தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும், அதிபர்,ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவுக்கும் இடையில், இன்று (17) இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த பேச்சுவார்த்தை நாளை (18) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில், அதிபர்,ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எது எவ்வாறாயினும், தமது பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு எட்டப்படாத நிலையில், இணைய வழியில் இன்றைய தினம் எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கையிலிருந்து விலகி, ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கை இன்றுடன் 37 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையை, கலந்துரையாடல் மட்டத்தில் தீர்க்க, உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக, புதிய கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.