இலங்கையின் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 146 பேர் மாத்திரமே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை விண்ணப்பம் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்த விடயம் வெளியாகியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் 2021 பெப்பரி 16 ஆம் திகதி தொடங்கியது.
எனினும் தற்பொழுது வரை 146 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல் அறியும் உரிமை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் நாரஹேன்பிட்டி இராணுவ மருத்துவமனையில் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.
அத்தோடு பாராளுமன்றத்தில் உள்ள சுகாதார மையத்தில் 24 பாராளுமன்ற உறுப்பினர்கள் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி போடாத பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் மற்றும் அதற்ககான காரணம் தங்களிடம் இல்லை என்று தகவல் அதிகாரியும், பாராளுமன்ற உதவி பொதுச் செயலாளருமான டிக்கிரி கே. ஜயதிலக கூறினார்.
மேலும் மொடர்னா, பைசர், சினோபார்ம் தடுப்பூசிகளை பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரமும் தங்களிடம் இல்லையென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 14 நாட்களில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமேகே , இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதராச்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ரோஹன திஸாநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஜனக்க திஸ்ஸகுட்டி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.