ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் இருந்த இலங்கையர்களில் 8 பேர் பாதுகாப்பாக அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பிரிட்டன் மற்றும் கட்டாருக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற அட்மிரல், பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேலும் 60 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் காபுல் நகரில் தங்கியுள்ளதாகவும், அவர்களையும் அங்கிருந்து அழைத்துச் செல்லுமாறு சில நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடம் இதற்கான உதவி கோரப்பட்டுள்ளதாக ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றிய தாலிபான்கள் அந்த நாட்டை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தலைநகர் காபூல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்த இராஜதந்திரிகள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் தமது பிரஜைகளை விமானங்கள் மூலம் அழைத்துச் செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
இதன்போது இலங்கையர்களையும் அங்கிருந்து வெளியே அழைத்துச் செல்ல தேவையான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்துள்ளதாக ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.