July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“நாட்டை முடக்க வேண்டாம் என்பதே பெரும்பான்மையினரின் நிலைப்பாடு”

நாட்டை முடக்க வேண்டும் என சுகாதார தரப்பினர் கூறினாலும், நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நபர்கள் நாட்டை முடக்காது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.நாட்டை முடக்க வேண்டாம் என்பதே பெரும்பான்மையானவர்களின் நிலைப்பாடாக உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

நாடு முடக்கப்பட்டாலும், முடக்கப்படாது போனாலும் மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் உள்ளன. நாட்டை முடக்கித்தான் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஏன் எதிர்பார்க்க வேண்டும். நாட்டில் முன்னெடுக்க வேண்டிய அத்தியாவசிய தேவைகள் உள்ளன.

மக்களின் செயற்பாடுகளை முடக்கினாலும் நாட்டை முடக்கினாலும் மக்களுக்கு கொடுக்க வேண்டிய அத்தியாவசிய சேவைகள் இயங்கியாக வேண்டும் எனக் கூறியுள்ள அவர், நாட்டை முடக்க வேண்டும் என சுகாதார தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் நாட்டை முடக்க வேண்டாம் என வியாபார தரப்பினர், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதி இறக்குமதி துறையினர், மத்திய தரப்பினர் கூறுகின்றனர்.

சுகாதார வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி நாட்டை முடக்காது செயற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கு முன்னர் 68 நாட்கள் நாடு முடக்கப்பட்டது, இதனால் நாட்டின் தலா தேசிய உற்பத்தியில் 550 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டது.இது நாட்டின் பொருளாதாரத்தை மோசமாக பாதித்தது என்பதை மறுக்க முடியாது. எமது தனிப்பட்ட நிலைமைகளை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ளப்போவதில்லை. அவர்களின் வியாபாரத்தையே அவர்கள் கருத்தில் கொள்வார்கள் எனவும் கூறியுள்ளார்.