November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“இரவு நேர ஊரடங்கு பயனற்றது”; அறிவியல் பூட்டுதலை விதிக்குமாறு அரச தாதியர்கள் சங்கம் வலியுறுத்தல்!

நாட்டின் தற்போதைய நிலைமைகளின் படி, இரவு நேர ஊரடங்கு பயனற்றது என அரச தாதியர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

அடுத்த கட்டமாக சுகாதாரத் துறையின் தொழிற்சங்கங்கள் நாட்டை முழுவதுமாக முடக்கும் படி அரசாங்கத்தை கட்டாயப்படுத்த உள்ளதாக சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

“இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அரசாங்கம் விதித்துள்ள ஊரடங்குச் சட்டம் பயனளிக்காது. அந்த நேரத்தில் யாரும் நடமாடுவதில்லை. இந்த ஊரடங்கு இரவில் சுறுசுறுப்பாக இயங்கும் வெளவால்களுக்கு மட்டுமே” என்று அவர் கூறினார்.

இப்போது அனைத்து மாகாணங்களிலும் கொவிட் தொற்று பரவியுள்ளதால், மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளும் பயனுள்ளதாக இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“கொவிட் -19 இப்போது அனைத்து மாகாணங்களிலும் பரவி வருகிறது. இப்போது மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்தை கட்டுப்படுத்துவதில் எந்த பயனும் இல்லை ”என்று அவர் கூறினார்.

நோய் பரவுவதைத் தடுப்பதற்கான ஒரே வழி, ஒரு வாரத்திற்கு அறிவியல் முடக்கத்தை விதிப்பதும், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைப் போன்று அனைத்து தொற்றாளர்களையும் அடையாளம் காண்பதும் மட்டுமே என்றார்.

ஏற்கனவே விதிக்கப்பட்ட முடக்கம் பயனற்றது. எனவே ஒரு வாரத்திற்கு அறிவியல் பூட்டுதலை விதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதன் படி, ஒரு வாரத்துக்கு நாடு முடக்கப்பட்டு சமூகத்தில் குறைந்தது 70% தொற்றாளர்களை அடையாளம் காணவேண்டும் எனவும். அதை தொடர்ந்து நாடு மூன்று நாட்களுக்கு திறந்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அத்தோடு மீண்டும் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டு பின்னர், சமூகத்தில் உள்ள அனைத்து தொற்றாளர்களையும் கண்டறிந்து அவர்கள் தனிமைப்படுத்தி அதன் மூலம் வைரஸ் பரவுவதை  தடுக்க முடியும் எனவும் அரச தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.