July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”எல்லாம் நன்மைக்கே”; சுகாதார அமைச்சில் இருந்து விடைபெற்றுச் செல்கையில் பவித்ரா கூறிய கதை!

தனக்கு வழங்கப்பட்ட சுகாதாரத் துறை அமைச்சு பறிபோகும் என தான் நினைக்கவில்லை எனவும், எதிர்பாராத நேரத்தில் எனது அமைச்சு மாற்றப்பட்டுள்ளதாகவும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

தற்போதுள்ள கொவிட் வைரஸ் பரவல் நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் தான் பல முன்னேற்றகரமான வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் திடீர் அமைச்சரவை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை காலமாக சுகாதாரத்துறை அமைச்சராக கடமையாற்றிய பவித்ரா வன்னியாராச்சியை, தற்போது போக்குவரத்து துறை அமைச்சராக நியமித்துள்ளார்.

இந்நிலையில் இன்று சுகாதார அமைச்சிற்கு சென்ற வேளையில் அவர் தனது கடுமையான அதிருப்தியை ஊழியர்களிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

அமைச்சில் இருந்து விடை பெற்றுச் செல்கையில் மன்னர் – புரோகிதர் கதை ஒன்றையும் தனது ஊழியர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் கூறுகையில் ” வாழ்க்‌கையில் அனைத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்படிதான் மன்னரும் – புரோகிதரும் வேட்டைக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் வேட்டையாடும் போது மன்னரின் இலக்கு தவறியதாம், என்ன இப்படி ஆகிவிட்டதே என மன்னர் கேட்டபோதும் எல்லாம் நன்மைக்கே என புரோகிதர் கூறினாராம்.

இன்னும் சிறிது நேரம் பயணிக்கும் போது மன்னரின் வாளினால் மன்னரின் ஒரு விரல் வெட்டுப்பட்டுவிட்டதாம்.ஏன் இவ்வாறு நடக்கின்றது என மன்னர் கேட்டாராம்.அதற்கும் பதில் கூறிய புரோகிதர் “எல்லாம் நன்மைக்கே என்றாராம்”.

உடனே மன்னருக்கு கோவம் வந்து, புரோகிதரை குழியொன்றில் போட்டுவிட்டு வேறு திசையில் பயணித்தாராம். அப்போது அரக்கர் கூட்டத்திடம் மன்னர் சிக்கிக் கொண்டாராம். அவரை நரபலி கொடுக்க அரக்கர்கள் தயாராகிய வேளையில் மன்னரின் ஒரு விரல் துண்டு வெட்டப்பட்டதை அரக்கர்கள் பார்த்தார்களாம்.

எனவே முழுமையான மனிதனையே நரபலி கொடுக்க வேண்டும், இவர் நரபலிக்கு கொடுக்க ஏற்றவர் அல்ல என கூறி அரக்கர்கள் அவரை விட்டுவிட்டார்களாம். அப்போதுதான் புரோகிதர் கூறியதும் உண்மையென மன்னர் நினைத்துக் கொண்டாராம்.

உடனே புரோகிதர் இருக்கும் இடத்தை தேடி சென்று மன்னர் புரோகிதருக்கு நன்றி கூறினாராம்.அப்போது புரோகிதர் மன்னரை பார்த்து, மன்னரே என்னை குழியில் வீசியமைக்கு நானே உங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஒருவேளை நான் உங்களுடன் வந்திருந்தால் உங்களை விட்டுவிட்டு என்னை பலி கொடுத்திருப்பார்கள் என புரோகிதர் மன்னரை பார்த்துக் கூறினாராம். ஆகவே எனக்கு நடந்த விடயங்களும் நன்மைக்கே என நினைத்துக் கொள்வோம்” என கூறியுள்ளார்.

“எதிர்பாராத தருணத்தில் போக்குவரத்து அமைச்சு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறியுள்ள அவர், ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் வரை இது குறித்து தமக்கு உண்மையில் தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.