July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்த வாரத்தின் பாராளுமன்ற அமர்வு நாளைய தினம் மாத்திரம் நடக்கும்!

இலங்கையில் நிலவும் கொவிட் தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு இந்த வாரத்தின் பாராளுமன்ற அமர்வை நாளையதினம் மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

இதற்கமைய நாளை முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகவிருப்பதுடன், முற்பகல் 11.00 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை வைரஸ் தொற்று (கொவிட்-19) (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம், உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான 3 கட்டளைகள் மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான (அதியாயம் 235) தீர்மானங்கள் என்பவற்றை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பிற்பகல் 4.50 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதமும் நடைபெறவுள்ளது.

அத்துடன், பல்வேறு காரணங்களால் இதுவரை கேட்கப்படாதுள்ள வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி திங்கட்கிழமையை ஒதுக்குவதற்கு இதற்கு முன்னர் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்கு அமைய அன்றையதினத்தில் பாராளுமன்றத்தை அடுத்ததாகக் கூட்டுவதற்கும் இந்தக் கூட்டத்தில் முடிவாகியுள்ளது.