நாட்டை குழப்பத்துக்கு உட்படுத்திய மற்றும் பொது மக்களால் நிராகரிக்கப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவதற்கே 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்படுவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றில் ஆரம்பமாகிய 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான விவாதத்திலேயே பிரதமர் இதனைக் கூறினார்.
“மக்கள் ஆணையானது நாட்டின் அபிவிருத்தி பணிகளை காத்திரமாக முன்னெடுப்பதற்காகவும் ஜனாதிபதியை வலுவூட்டுவதற்காகவுமே வழங்கப்பட்டுள்ளது” என்று பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
20ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஊடாக தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும், நாட்டை குழப்ப நிலைக்கு உட்படுத்தும் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் 20 ஆம் திருத்தம் மூலம் தோற்கடிக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.
“20ஆவது திருத்தம் கொண்டு வரப்படுவதற்கான நோக்கம் தற்போது உள்ள அரசியலமைப்பு திருத்தத்தினை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அல்ல” என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ”நீண்ட நாட்களாக பொதுமக்கள் எதிர்பார்த்திருந்த தேசத்தை கட்டியெழுப்புவதற்கான புதிய அரசியலமைப்பு கொண்டுவருவதற்கு இதன் மூலம் வழி ஏற்படும்” என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.