மாகாணங்களுக்கு இடையே இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் சுமார் 90 வீதமானவை அரசு நிறுவனங்கள், சுகாதார துறை மற்றும் இராணுவம் போன்ற பெயரில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து சேவையில் ஈடுபட்டு வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வட மத்திய மற்றும் மத்திய மாகாண சாலைப் பயணிகள் போக்குவரத்து ஆணையகம் தம்புள்ளை பொலிஸாருடன் இணைந்து தம்புள்ளையில் மாகாணங்களுக்கு இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளை ஆய்வு செய்ததையடுத்து இது தெரிய வந்துள்ளது.
காலாவதியான உரிமங்கள் மற்றும் பல்வேறு அரசு நிறுவனங்களின் தலைவர்கள் வழங்கிய கடிதங்களை காட்டி பெரும்பாலான பஸ்கள் இவ்வாறு பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக தனியார் பஸ் தொழிற்சங்க தலைவர்களின் பஸ்கள் விதிகளை மீறி, மாகாணங்களுக்கு இடையே பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
தமது பஸ் உரிமையாளர்கள் தயார்படுத்தி தந்த ஆவணங்களை வைத்தே தாம் போக்குவரத்து சேவையை முன்னெடுத்துள்ளதாக சில பஸ் நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் இதன் போது கூறியுள்ளனர்.