பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கடற்றொழில் அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில், அவரது எண்ணக்கருவுக்கு அமைய ஆரம்பிக்கப்பட்ட மீனவ கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கு வீடமைப்பு விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கைத்தொழில் இராஜாங்க அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மகிந்த ராஜபக்ஷ கடற்றொழில் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உள்ள கடலோரப் பிரதேசங்கள் மற்றும் குளங்களை அண்மித்ததாக 60 மீனவ கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மீனவ கிராமங்களை மேம்படுத்தி அபிவிருத்தி செய்தல், பராமரித்தல் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இதன்போது பிரதமர் தெரிவித்துள்ளார்.
மீனவ கிராம மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு 2022 வரவு செலவுத் திட்டத்திற்காக சமர்ப்பிக்க வேண்டிய முன்மொழிவை தயாரிக்குமாறு பிரதமர், இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் அந்த மீனவ கிராமத்தை அண்மித்ததாக புதிய வீடமைப்பு திட்டங்களை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராயவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.