நாட்டில் ‘கொவிட்’ பரவலைக் கட்டுப்படுத்த நாடு மூடப்பட வேண்டும் என தாம் ஏற்கனவே ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை (11 ஆம் திகதி) இது தொடர்பில் எழுத்துபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை வைத்தியர்கள் சங்கம் என்ற வகையில் தாம் எப்போதும் ஜனாதிபதி, சுகாதார அமைச்சர், சுகாதார செயலாளர் மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகத்திற்கு நாட்டு நிலைமைகள் தொடர்பில் அறிவித்து வருவதாக பத்மா குணரத்ன மேலும் கூறினார்.
இதனிடையே நாட்டை முடக்குமாறு சுகாதார நிபுணர்களினால் உத்தியோகபூர்வமாக பரிந்துரைக்கப்பட்டால் அதனை செய்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் இதுவரையில் அவ்வாறான பரிந்துரைகள் முன்வைக்கப்படவில்ல என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.