November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லங்கா பிரீமியர் லீக்: கண்டி டஸ்கர்ஸ் அணியை வாங்கியது சல்மான் கான் குடும்பம்

இலங்கையில் முதன்முறையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) இருபது20 கிரிக்கெட் தொடருக்கான அணிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கண்டி டஸ்கர்ஸ் அணியை பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கான் குடும்பத்தினர் வாங்கியுள்ளனர்.

கண்டி டஸ்கர்ஸ் அணியை சல்மான் கான் வாங்கியுள்ளது தொடர்பாக லங்கா பிரீமியர் லீக் அறிக்கையொன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

கான் குடும்பம் சார்பில் சல்மான் கானின் தந்தை சாலிம் கான் மற்றும் இளைய சகோதரன் சுஹைல் கான் ஆகியோர் கண்டி டஸ்கர்ஸ் அணியில் முதலிட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

நவம்பர் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், கடந்த திங்களன்று புதிய அணிகள் அறிமுகப்படுத்தப்பட்டதோடு, விளையாட்டு வீரர்களுக்கான ஏலமும் நிறைவடைந்துள்ளது.

இலங்கை தேசிய அணியின் கிரிக்கெட் வீரர் குசல் ஜனித் பெரேராவைத் தலைமையாகக் கொண்ட கண்டி டஸ்கர்ஸ் அணியில் இருபது20 நட்சத்திர வீரரான கிறிஸ் கெயில் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

லங்கா பிரீமியர் லீக் போட்டிகளில் கொழும்பு கிங்ஸ், தம்புள்ளை ஹோவ்ஸ், காலி கிளேடியேடர்ஸ், ஜெஃப்னா ஸ்டெலியன்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே, கண்டி டஸ்கர்ஸ் அணி விளையாடும் போட்டிகளின் போது சல்மான் கான் பார்வையாளராகக் கலந்துகொள்வார் என அவரது மற்றொரு சகோதரர் அர்பாஸ் கான் உறுதிப்படுத்தியுள்ளார்.