
யால தேசிய சரணாலயத்தின், 3ஆம் வலயத்தில் காட்டு யானை ஒன்றின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, அதன் தந்தங்களும், வாலும் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி, வன ஜீவராசிகள் திணைக்களத்தினூடாக ஒரு விசாரணையும், பொலிஸாரால் தனி விசாரணையும், ஒன்றிணைந்த விசாரணையுமாக மூன்று கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக வன ஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார தெரிவித்தார்.
வன ஜீவராசிகள் உதவி பணிப்பாளரின் தலைமையில், இந்த குற்றச் செயல் தொடர்பில் விசாரணையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யானை கொலை செய்யப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையும் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவிற்கு அமைய யானையின் உடலை புதைப்பது தொடர்பான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என வன ஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
செல்லக்கதிர்காமம் – கோத்தமிகம பகுதியில் அடையாளம் தெரியாதவர்களினால் குறித்த யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் யானையின் தும்பிக்கை பகுதி வெட்டப்பட்டு தந்தங்கள் இரண்டும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோன்று யானையின் வால் பகுதியும் வெட்டப்பட்டுள்ளதாகவும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.